Depression Disease that cripple people / psychology in tamil

Disease that cripple people - psychology in Tamil



வாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல்
ஒய்.ஆண்டனி செல்வராஜ்

வரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, தற்போது மக்களின் வாழ்க்கையை முடக்கும் நோய்களில் இதய நோய்கள் முதலிடம் வகிக்கின்றன. ஆனால் 2020-க்கு பிறகு மன அழுத்த நோய் அந்த இடத்தைப் பிடித்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக மாறி வருகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மனநல உதவிப் பேராசிரியர் மருத்துவர் ஆ.காட்சன் கூறியதாவது:

மன அழுத்தம் என்பது தாழ்வு மனப்பான்மைக்கு நிகரான ஒன்றாக தவறாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் சர்க்கரை வியாதி போல இதுவும் ஒரு நோய்தான். இதனால் வளர் இளம் பருவத் தினரும், 40 வயதுக்கு மேற்பட்டவர் களும் அதிகம் பாதிப்புக்கு உள் ளாகின்றனர். எப்போதும் அதிக மனச் சோர்வு மற்றும் உடல் சோர்வு, விருப்பமுள்ள செயல்களில்கூட நாட்டம் இல்லாத தன்மை, தான் எதற்கும் உதவாதவன், வாழ்வதற்கு தகுதியில்லாதவன், இனி வாழ்வ தற்கு வழியில்லை என்ற எண்ணங் கள், தூக்கமின்மை, பசியின்மை, கவனக்குறைவு, தற்கொலை எண்ணங்கள் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

மன அழுத்தம் தீவிரமாகும் போது, குறிப்பாக வயதானவர் களுக்கு தற்கொலை செய்ய தூண்டுமாறு மாயக்குரல்கள் கேட்பது, பிறர் மீது தேவையற்ற சந்தேகம் போன்றவை ஏற்படலாம். தோல்விகள், பிரச்சினைகள் ஏற்படும்போது மட்டுமல்ல, எந்தவித காரணங்களும் இல்லாமல்கூட ஒருவருக்கு மன அழுத்த நோய் ஏற்படலாம்.

மன அழுத்த நோயால் பாதிக்கப்படும் எல்லோருக்கும் வெளிப்படையாக இந்த அறிகுறிகள் காணப்படுவதில்லை. சில சமயங்களில் பள்ளி, கல்லூரியை புறக்கணிப்பது, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது, திடீரென்று ஏற்படும் போதைப் பழக்கம்கூட வளர் இளம் பருவத் தினரின் மன அழுத்த நோயின் வெளிப்பாடாக இருக்கலாம்.

காரணமே கண்டுபிடிக்க இயலாத உடல் நோய் அறிகுறி கள், தலைவலி, நரம்புக் கோளாறுகள்கூட வயதானவர் களின் மற்றும் பெண்களின் மன அழுத்த நோயின் அறிகுறிகளாக வெளிப்படலாம். இவ்வாறு பல வகையான மன அழுத்த நோய்கள் இருப்பதால் தகுந்த ஆலோசனை யும், காலம் தாழ்த்தாத சிகிச்சையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவர் ஆ.காட்சன்

சில நேரங்களில் இருதுருவ மன நோய் என்ற பைபோலார் மன நோயின் ஓர் அங்கமாக மன அழுத்த நோய் ஏற்படும். மன அழுத்த நோயால் பாதிக்கப் படுபவருக்குத்தான் அதன் வலியும், வேதனையும் புரியும். இவர்கள் வேண்டுமென்றே தங்களை தனிமைப்படுத்திக் ்கொள்பவர்களோ, மனதளவில் பலவீனமானவர்களோ அல்ல. எனவே, தேவையற்ற ஆலோ சனைகளையும், கட்டாயப்படுத்து தலையும் தவிர்த்து சிகிச்சை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கவுன்சலிங் மட்டுமே நிவாரணி அல்ல. மிதமாக மற்றும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மூளை நரம்புகளில் செரடொனின் என்ற வேதியியல் பொருளை சமநிலைப்படுத்தும் மருந்து வகைகளை உட்கொண்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பைத்தியம் பிடித்தவர்கள்தான் மனநல மருத்துவரை பார்ப்பார்கள் என்ற தவறான எண்ணம் இன்னமும் பொதுமக்களிடம் நிலவுவதால் காலம் தாழ்த்தி அல்லது தேவையற்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு அதிக சிக்கல்களுடன் வருபவர்களின் எண்ணிக்கையே அதிகம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Thanks to :
மருத்துவர் ஆ.காட்சன்

April 6, 2017 

Comments

Popular posts from this blog

ulaganathan's ulaga neethi translation by EZHILARASAN

moothurai translation FREE ENGLISH THROUGH TAMIL EZHILARASAN

WRITTEN ENGLISH TRAINING through Tamil EZHILARASAN HINTS 0215